பிரதோஷ வரலாறு! - ஒரு முழுமையான தொகுப்பு

பி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம்! வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.
ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள்.
சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்?
கேட்டால், ‘‘இது செவிட்டு சாமிங்க! அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம்!’’ என்றும், ‘‘இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்!’’ என்றும் சொல்வார்கள். உண்மைதான்! நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும்! - இதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட தவறான அணுகுமுறைகள். இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே!
ஒருவரிடம் நாம் மந்திர உபதேசம் பெற்றால், அந்த மந்திரத்தை தினந்தோறும் இவ்வளவு தடவை (குருநாதர் சொன்னபடி) சொல்லி உருவேற்ற வேண்டும். அப்படி நம்மால் செய்ய முடியாதபோது, நமக்கு விபரீத பலன்கள் விளைய வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரு பசு மாட்டின் காதில் ஓத வேண்டும். இதனால் மந்திரத்தைச் சொல்லாததால் உண்டாகும் விபரீதப் பலன்கள் நம்மைத் தீண்டாது. மிகவும் நுட்பமான தகவல் இது.
இந்த உண்மை தெரியாமல் யாரோ - எப்படியோ ஆரம்பித்து வைத்த (கோயிலில் நந்தியின் காதுகளில் சொல்லும்) பழக்கம் இன்று மக்களிடையே பரவி விட்டது. உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது! கோயிலில் உள்ள நந்தியின் உருவத்தை நாம், நம் கைகளால் தொடக் கூடாது. அதற்கென உரியவர்கள் (குருக்கள்) மட்டுமே தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்ய வேண்டும். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கு, மந்திர உபதேசம் பெறுவது பற்றி சில முக்கியமான தகவல்கள்:
ஒரு குருவிடம் இருந்து ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் பெற வேண்டும். மந்திர உபதேசம் செய்யும் குருவுக்கு அந்த மந்திரம் ஸித்தியாகி இருக்க வேண்டும்.
‘‘எனக்கு ஏழு தடவை மந்திர உபதேசம் ஆகியிருக்கு!’’ என்பது போல, பலரிடம் இருந்து பல விதமான மந்திரங்களை உபதேசம் பெறக் கூடாது!
நாம் பெற்ற மந்திர உபதேசத்தைத் தினந்தோறும் உரிய முறைப்படி உச்சரித்து வந்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மந்திரம் நமக்கு ஸித்தியாகும். பலன் அளிக்கும். ‘மந்திர ஸித்தி கிடைத்து விட்டதே!’ என்று அடுத்த மந்திர உபதேசத்துக்குத் தாவக் கூடாது.
ஆனால், நம் மனம் சும்மா இருக்காது. அடுத்த மந்திரத்தை நோக்கித் தாவவே செய்யும். அப்போது, நமக்கு மந்திர உபதேசம் செய்த குருவை நாடி, அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்பதே நல்லது.
எந்த மந்திரமாக இருந்தாலும் அது, விடாமுயற்சியோடு பரிபக்குவமாகத் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு மட்டுமே ஸித்தி அளிக்கும்.
இனி பிரதோஷ வரலாறு.
பிரதோஷம் வந்த விதம்
தே வேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.
தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ‘‘பிடி, சாபம்!’’ என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.
தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.
யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.
வெடித்தார் துர்வாசர். ‘‘தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்!’’ என சாபம் கொடுத்தார்.
உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.
திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.
சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.
‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! உமையருபாகா! கங்காதரா! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்!’’ என்று வேண்டினர்.
சிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ‘‘கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!’’ என்றார்.
இந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், ‘‘‘சுந்தரா! அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்!’’ என அழகாக நயம்படக் கூறுவார்.
விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆல(க)£ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், ‘ஆல(க)£ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு ‘(திரு)நீலகண்டர்’, ‘ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.
(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, ‘அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)
அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.
மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.
ரஜனீ - பிரதோஷம்
பி ரதோஷத்துக்கு ‘ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் ‘ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். ‘ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரதோஷங்கள் ஐந்து!
பி ரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
நித்தியப் பிரதோஷம்: ஒவ் வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை
ம ற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.
பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.
நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்?
கு ழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. ‘‘சிலாதா! என்ன வேண்டும் கேள்!’’ என்றார் சிவபெருமான்.
‘‘தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!’’ _ சிலாதர்.
‘‘என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு!’’ என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.
இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே ‘நந்தி’.
சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.
தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).
ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.
அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.
உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார்.
நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.
உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.
‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான்.
அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.
அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.
ஆஞ்சநேயரின் சனிப் பிரதோஷம்!
உ ஜ்ஜயினி நாட்டின் அரண்மனைக்குள் நுழைந்தார் மாணிபத்திரர். தன்னைத் தேடி வந்தவரை அன்புடன் வரவேற்றார் அரசர் சந்திரசேனன்.
வந்த காரியத்தைப் ‘பளிச்’சென்று சொன்னார் மாணிபத்திரர்: ‘‘மன்னா! சிவகண நாதர்களில் ஒருவன் நான். என் பெயர் மாணிபத்திரர். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானான வீரமாகாளர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். சிவபக்தியில் தலைசிறந்தவரான உங்களின் நட்பை விரும்பியே இங்கு வந்தேன். என் வருகைக்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை!’’
‘‘ஐயா... மதிப்புக்கு உரியவரே! உங்களைப் போன்ற ஒருவர், எனக்கு நண்பராக வாய்ப்பது நான் செய்த புண்ணியம்’’ என்ற மன்னர் மகிழ்வுடன் மாணிபத்திரரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
பிரதிபலன் எதிர்பாராத அவர்களது உண்மையான நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
மன்னரின் மாசு-மறுவில்லாத அன்பு மாணிபத்திரரைக் கவர்ந்தது. ஒரு நாள் அவர், ‘‘மன்னா! தவறாக நினைக்காதே... இது என் அன்பின் அடையாளம். இந்தா... இதை வைத்துக் கொள்!’’ என்று சொல்லி, உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை மன்னரிடம் தந்தார். மன்னர் அதை வாங்கி ஆபரணத்துடன் சேர்த்து தன் மார்பில் அணிந்து கொண்டார்.
தகவல் ஊரெங்கும் பரவியது. நாட்டின் எல்லைகளைக் கடந்து, வேற்று அரசர்களிடமும் பரவியது.
‘சிவகண நாதரான மாணிபத்திரர் தந்த அந்த சிந்தாமணி ரத்தினத்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும்!’ என்று அண்டை அயல் அரசர்கள் ஒவ்வொருவரும் திட்டம் போட்டனர். அதன் பொருட்டு, தங்கள் தூதர்களையும் உஜ்ஜயினிக்கு அனுப்பினர்.
‘‘மன்னா! எங்கள் மன்னர் தங்களுக்கு நெடுநாளைய நண்பர். அந்த நட்புக்கு அடையாளமாக, தங்களிடம் இருக்கும் சிந்தாமணி ரத்தினத்தை அவர் விரும்புகிறார். என்னை வாங்கி வரச் சொன்னார். இந்தாருங்கள்! அதற்கான ஓலை!’’ என்றான் ஒரு தூதன்.
அடுத்த தூதன் ஏதும் பேசாமல் பணிவுடன் ஓலையை நீட்டினான். அதில், ‘உஜ்ஜயினி மன்னருக்கு... தங்களிடம் ஓர் உத்தமமான சிந்தாமணி ரத்தினம் இருப்பதை அறிவேன். அதை இந்தத் தூதன் மூலம் எனக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன். மறுத்தால் போர் மூளும். இப்படிக்கு...’ என இருந்தது.
மூன்றாவது தூதனிடம் இருந்து அரசரே ஓலையை வாங்கினார். அதில், ‘உஜ்ஜயினி மன்னா! உனக்கே தெரியும் _ நான் வீணாக போரில் ஈடுபட மாட்டேன் என்பது. ஏராளமான வீரர்கள் மடிவார்கள். நாட்டு மக்களுக்கும் பல விதங்களில் இழப்பு வரும். அரசர்களான நம்மால் நம் குடிமக்கள் அல்லல்பட வேண்டுமா? நீங்களே தீர்மானியுங்கள்! சிந்தாமணி ரத்தினத்தைச் சீக்கிரம் நீங்கள்அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இப்படிக்கு...’ என இருந்தது.
ஓலைகள் அனைத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிய உஜ்ஜயினி அரசர், ‘‘இவ்வளவு தூதர்கள் வந்ததும், இது ஏதோ நல்லெண்ணத் தூதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை. நயமாகவும் பயமாகவும் எத்தனை மிரட்டல்கள்! இந்த அற்பர்களின் அவல புத்தி, இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நேர்ந்தாலும் சரி, இந்தச் சிறியவர்களிடம் அற்புதமான சிந்தாமணி ரத்தினத்தைத் தர மாட்டேன். போர்தான் முடிவு என்றால் அதற்கும் நான் தயார்!’’ என்று சொல்லி, தூதர்களைத் திருப்பி அனுப்பினார்.
தங்கள் ஆசை நிறைவேறாதது கண்டு மற்ற நாட்டு அரசர்கள் எல்லாம் தத்தமது படைகளுடன் வந்து உஜ்ஜயினி நாட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.
ஆனால், உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சந்தனம், பூக்கள், ஸ்வாமிக்கு உண்டான ஆபரணங்கள், தூப-தீபம், அபிஷேகத்துக்கு உரிய பொருட்கள் ஆகியவற்றுடன் வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார்.
அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. ‘அரசர் செய்ததைப் போல, அவ்வளவு உயர்ந்த பொருட்களை வைத்து நம்மால் பூஜை செய்ய முடியாது. நமக்குக் கிடைப்பதை வைத்து பூஜை செய்ய வேண்டியதுதான்!’ என்று தீர்மானித்தான் அந்த யாதவச் சிறுவன்.
கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலையும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்துக் கொண்டான்.
அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். ‘பூஜை முடிந்ததும் மன்னர் தியானம் செய்தாரே... நானும் அதே போல் தியானம் செய்கிறேன்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அந்தச் சிறுவன், சிவ தியானத்தில் ஆழ்ந்தான். நேரம் இரவு ஆனது.
அப்போது, ‘‘மகனே! மகனே! சாப்பிட வாடா!’’ என்றபடியே அவன் தாய் அங்கு வந்தாள். வீட்டுக்கு வெளியே பூஜை செய்து தியானத்தில் இருந்த மகனைக் கண்டாள். கோபம் தலைக்கேறியது. ‘‘சாப்பிட வாடா! சாப்பிட வாடான்னு கத்திக்கிட்டு இருக்கேன். இங்கு வந்து வெளயாடிக் கிட்டா இருக்கே!’’ என்று கத்தியபடி மகன் முதுகில் நாலு சாத்துச் சாத்தி, சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.
அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான்.
இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மாவால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான்.
‘‘சிவபெருமானே! அருந்தவம் செய்யும் அடியார்களுக்குக் கூடக் கிடைக்காத அருள், எனக்குக் கிடைத்திருக்கிறதே! இது எனது பூஜையின் பலனா? உன் திருவிளை யாடலா? அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியமா? என் தாயார், குற்றம் செய்தும் இப்படிக் குறைவில்லாமல் வாரி வழங்கி இருக்கிறாயே!’’ என்று பலவாறு புகழ்ந்தான்.
சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள். ‘நல்ல மகனைப் பெற்றேன் நான்!’ என்று மகனைத் தழுவினாள். ‘‘மன்னர் செய்த பூஜையைப் பார்த்து, அதைப் போலவே செய்ய வேண்டும் என்று என் மகன் விரும்பியதால் அல்லவா இவ்வாறு நிகழ்ந்தது. இதை உடனடியாக மன்னரிடம் சொல்ல வேண்டும்’’ என்று ஆனந்தத்தில் புலம்பிய அவள், அரண்மனைக்குச் சென்று நடந்ததை எல்லாம் அரசரிடம் விவரித்தாள்.
அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். மந்திரிகள் முதலானோர் பின்தொடர்ந்தார்கள். அங்கே இறைவன் எழுந்தருளி இருந்ததையும் அவரால் விளைந்த தையும் கண்ட மன்னர், இறைவனை வலம் வந்தார்.
‘‘அடியவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இறைவன் இங்கே எழுந்தருளினாரே!’’ எனச் சொல்லி யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள். ‘நானும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள வருகிறேன்!’ என்பதைப் போல, சூரியனும் உதயமானான்.
ஊரைச் சுற்றிக் குவிந்திருந்த பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள். ‘‘சிந்தாமணி ரத்தினத்துக்காகப் படைகளுடன் இங்கே குவிந்து, சீறிப் பாயத் தயாராக இருக்கிறோம் நாம். ஊருக்குள் இப்படி, பெரும் கூச்சல் கேட்கிறதே! என்ன ஆயிற்று?’’ என்று குழம்பினார்கள். ஒற்றர்களை அனுப்பி நடந்ததைத் தெரிந்து கொண்டார்கள். குழம்பியிருந்த அவர்கள் உள்ளத்தில் ஆச்சரியம் இடம் பிடித்தது.
‘‘சந்திரசேனன் உத்தமமான பக்திமானாகவும் பரிபூரணமான சிவனருள் பெற்றவனாகவும் இருக்கிறான். இதைப் புரிந்து கொள்ளாமல் அவனுடன் போர் செய்ய வந்தோமே... இது பெரும் தவறவல்லவா!’’ என்று தங்களுக்குள்ளாகக் கூடிப் பேசிய பகை அரசர்கள், உடனடியாகத் தங்கள் படைகளை யெல்லாம் தங்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.
அதன் பிறகு அரசர்கள் அனைவரும் உஜ்ஜயினிக்குள் நுழைந்து, பணிவோடும் அன்போடும் சந்திரசேனனை வணங்கினார்கள். ‘‘மன்னா! உங்கள் நட்பு, எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். எங்கள் தவறுகளை மன்னியுங்கள்!’’ என்று வேண்டினார்கள்.
‘‘அரசர்களே! உங்களுடனான நட்பு எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்!’’ என்றார் சந்திரசேனன்.
உள்ளத்தால் இணைந்த அரசர்களும் சந்திரசேனனும் ஒன்றாகச் சேர்ந்து போய், மகாகாளேஸ்வரரை வணங்கியதோடு, யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத்தையும் தரிசித்து மகிழ்ந்தார்கள்.
பின்னர் யாதவச் சிறுவனைத் தழுவி, ‘‘சிறுவனே! இந்த உலகத்தில் இருக்கும் ஆயர்களுக்கு எல்லாம் நீயே தலைவனாக இருப்பாய்!’’ என்று ஆசி கூறினார்கள்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.
யாதவச் சிறுவனை நெஞ்சோடு தழுவி அணைத்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவபெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையும் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.
இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்கள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.
நந்தகோபன் வீட்டில் அவதார புருஷரான கண்ணன் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் அனைவருக்கும் தெரியும்.
சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்பவர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா?
பிரதோஷ மகிமை!
வி தர்ப்ப தேசம் பகைவர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. அரசர் சத்தியாதனன் தன் சேனைகளுடன் பகைவர்களோடு கடுமையாக மோதினார். இருந்தும் வீரம் அங்கே பலனளிக்கவில்லை. சத்தியாதனனைப் பகைவர்கள் கொன்று விட்டார்கள்.
‘‘ஓ... வீரர்களே! நாம் ஜெயித்து விட்டோம். நகரத்துக்குள் புகுந்து கொள்ளையடியுங்கள். விலை உயர்ந்தது எதையும் விட்டு வைக்காதீர்கள்!’’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கொள்ளையைப் பார்க்கப் பிடிக்காததைப் போல, சூரியன் மறைந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. கொள்ளை அடிப்பதற்காக நகருக்குள் புகுந்தனர் வீரர்கள்.
‘மன்னர் இறந்து விட்டார். பகைவர்கள் ஊருக்குள் புகுந்து விட்டார்கள்’ என்ற தகவல், அரசி ஸதிக்குத் தெரிவிக்கப்பட்டது.
நிறைமாத கர்ப்பிணியான அவள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதபடி, தன்னந்தனி ஆளாக யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி மேற்குத் திசை நோக்கிப் போனாள். தள்ளாடியபடி ஒரு காட்டுக்குள் நுழைந்த அரசி, அங்கு ஒரு குளக்கரையில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாகம் மேலிட, குழந்தையைக் கரையிலேயே வைத்துவிட்டுத் தண்ணீர் குடிப்பதற்காகக் குளத்தில் இறங்கினாள். அவளுக்காகவே காத்திருந்ததைப் போலக் குளத்தில் இருந்த ஒரு முதலை, ராணியைப் பிடித்து இழுத்து விழுங்கத் தொடங்கியது.
குளத்தில் ராணியின் மரண ஓலமும், கரையில் குழந்தையின் கதறலும் சேர்ந்து ஒலித்தன. சற்று நேரத்தில் ராணியின் குரல் அடங்கி, குழந்தையின் அழுகுரல் மட்டுமே கேட்டது.
அப்போது கணவனை இழந்த உமா எனும் பெண் ஒருத்தி, தன் ஒரு வயது ஆண் குழந்தையுடன் அந்தப் பக்கமாக வந்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்டவள் குளக்கரைக்கு விரைந்தாள். அங்கு அரசியின் அநாதைக் குழந்தையைக் கண்டாள்.
‘‘யார் இந்தக் குழந்தை? உள்ளத்தைக் கவரும் அழகுடன் இருக்கிறதே! தொப்புள்கொடி கூட இன்னும் அறுக்கவில்லை. இதை எடுத்துக் கொண்டுபோய் நாம் வளர்க்கலாமா, கூடாதா? யாரைக் கேட்பது?’’ என்று உமா தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே ரிஷி ஒருவர் வந்தார். ‘‘பெண்ணே! இந்தக் குழந்தை ஒரு ராஜகுமாரன். இவனை நீ வளர்த்து வா! உன் குலமும் இந்த உலகமும் உயரும்’’ என்று வழிகாட்டினார்.
தன் குழந்தையுடன் அந்தக் குழந்தையையும் சேர்த்து வளர்க்கத் தீர்மானித்தாள் உமா. கணவனை இழந்து வறுமையில் தவித்தாலும், குழந்தையை விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனம் வரவில்லை. இரண்டு குழந்தைகளுடன் ஏகசக்கரம் எனும் நகருக்குச் சென்று, பிச்சை எடுத்துக் குழந்தைகளை வளர்த்து வந்தாள்.
குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்ததும் உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்து வைத்தாள். பிள்ளைகள் இருவரும் வேதங்களிலும், அரசர்களுக்கு உரிய ஆயுதப் பயிற்சியிலும் வல்லவர்களாக ஆனார்கள். தினந்தோறும் தாயுடன் சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்து வந்தார்கள்.
ஒரு நாள் அவர்களைத் தேடி சாண்டில்ய முனிவர் வந்தார். அவரை வணங்கிய உமா, ‘‘முனிவரே! என் இரண்டாவது மகனின் வரலாற்றைச் சொல்லுங்கள்!’’ என வேண்டினாள்.
‘‘பெண்ணே! சத்தியாதனன் என்ற மன்னனின் மகன் இவன். மன்னன் போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப்பட்டான். அரசி இவனைப் பெற்றுப் போட்டுவிட்டு, தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கியபோது ஒரு முதலை அவளை விழுங்கி விட்டது. அவள் பெற்றுப் போட்ட குழந்தையைத்தான் நீ உன் பிள்ளையுடன் சேர்த்து வளர்த்து வருகிறாய்!’’ என்று நடந்ததை விவரித்தார் சாண்டில்யர்.
குழம்பினாள் உமா. ‘‘முனிவரே! சகல விதமான வாழ்க்கை வசதிகள் இருந்தும் அந்த அரசனுக்கு, இவ்வளவு விபத்துகள் ஏன் வந்தன?’’ என்ற கேள்வியை எழுப்பினாள்.

‘‘எல்லாவற்றுக்கும் முன்வினைதான் காரணம்!’’ என்ற சாண்டில்யர் அதை விவரிக்கத் தொடங்கினார்:
‘‘போன பிறவியில் சத்தியாதனன் மதுரையில் மன்னனாக இருந்தான். பிரதோஷ காலம் தோறும் தவறாமல் போய் சோமசுந்தரப் பெருமானை பூஜை செய்வான். ஒரு முறை பிரதோஷ வழிபாட்டை, கோபத்தின் காரணமாக பாதியில் நிறுத்தினான். அப்போது போர்க்களத்தில் தோற்றுப் போய்த் தன் முன்னால் நிறுத்தப்பட்ட சோழ மன்னனைக் கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் கொன்றான். அகம்பாவம் காரணமாக, பாதியில் நிறுத்திய பூஜையைத் தொடர்ந்து நடத்தவும் இல்லை. அன்று இரவு அறுசுவை உணவுகளை ஆசையோடு சாப்பிட்டான். அந்தப் பாவத்தால்தான், இந்தப் பிறவியில் அரசனாக இருந்தும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் பகைவரால் கொல்லப்பட்டான்.
உன் கையில் கிடைத்த இந்தப் பிள்ளைதான், போன பிறவியிலும் இந்த (பாண்டிய) மன்னனுக்குப் பிள்ளையாக இருந்தான். தந்தை செய்யாமல் விட்ட சிவபூஜையைப் பற்றி நினைக்காமல், தந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டுச் சுகமாக இருந்தான். தந்தையின் சொத்துக்கு மட்டும்தான் பாத்தியதை (உரிமை) உண்டா என்ன? தந்தையின் பாவத்திலும் பிள்ளைக்குப் பங்கு உண்டே! அதனால்தான் அதே பையன், இந்தப் பிறவியிலும் அதே மன்னனுக்கு மகனாகப் பிறந்து அநாதையாகித் துயரம் அனுபவிக்கிறான்.
இந்தப் பிள்ளையின் தாயான ராணி, முதலை விழுங்கி துர்மரணம் அடைந்தாளே, அது ஏன் என்பதையும் சொல்கிறேன், கேள்! போன பிறவியிலும் இவள் அரசியாக இருந்தும், மன்னனின் மற்ற மனைவிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றாள். அந்தப் பாவத்தால்தான் இந்தப் பிறவியில் இவளை ஒரு முதலை கொன்றது. இதுதானம்மா இந்தப் பிள்ளை மற்றும் அவன் பெற்றோரின் வரலாறு’’ எனச் சொல்லி முடித்தார் சாண்டில்யர்.
கேட்டுக் கொண்டிருந்த உமாவின் கண்கள் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தின.
சாண்டில்யர் தொடர்ந்தார். ‘‘நீ பெற்ற உன் சொந்தப் பிள்ளையைப் பற்றியும் சொல்கிறேன். இவன் போன பிறவியில் ஓர் அந்தணனாக இருந்தான். ஏராளமான செல்வம். இருந்தும், யார் என்ன தானம் கொடுத்தாலும் யோசனையே செய்யாமல் அவற்றை எல்லாம் வாங்கினான். யாருக்கும் எதையும் கொடுக்க மாட்டான். எல்லா விதமான தானங்களையும் வாங்கிய அந்தப் பாவம்தான், இப்போது வறுமையில் இருக்கிறான்’’ என்றார்.
பிள்ளைகளுடன் அவர் கால்களில் விழுந்து வணங்கினாள் உமா.
அவர்களுக்கு ஆசி கூறிய சாண்டில்யர், ‘‘உமா! உன் பிள்ளைக்கு ‘சுசிவிரதன்’ என்றும், ராஜகுமாரனுக்கு ‘தர்மகுப்தன்’ என்றும் பெயரிடு. பிரதோஷ காலம்தோறும் மறக்காமல் சிவபெருமானை வழிபடுங்கள்! உன் மூத்த பிள்ளையின் தரித்திரம் தொலைந்து போகும்; இளைய பிள்ளை சக்ரவர்த்தியாக ஆவான்!’’ என்றார்.
அப்போது உமா கேட்டாள்: ‘‘ஸ்வாமி! பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!’’
அதையும் விவரித்தார் அந்த அருந்தவ முனிவர். ‘‘பிரதோஷ நாளன்று தூய்மையான நீரில் குளிக்க வேண்டும். பகல் பொழுதில் எதுவும் சாப்பிடக் கூடாது. மாலைப் பொழுதில், பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய இடத்தைத் தூய்மை செய்து, மேலே - அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த சிவந்த நிறத் துணிகளைப் பந்தல் போல அமைக்க வேண்டும். மேலும், மங்கலகரமாக கோலங்கள் போட வேண்டும். அங்கே அம்பிகையுடன் கூடிய சிவபெருமானை வைத்து, தூபம்- தீபம் முதலிய எதிலும் குறை வைக்காமல் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்’’ என்ற சாண்டில்யர் சிவபெருமானுடைய மூல மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார்.
உபதேசம் பெற்றவர்கள் அன்று முதல் தவறாமல் முறைப்படி பிரதோஷ வழிபாட்டைச் செய்து வந்தார்கள்.
நான்கு மாதங்கள் ஆயின. சுசிவிரதன் குளிப்பதற்காக ஆற்றுக்குப் போனான். அங்கே ஒரு குடம் நிறையத் தங்கம் கிடைத்தது. ‘பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை பூஜை செய்த பலன் இது!’ என்று நினைத்த சுசிவிரதன் தங்கத்தை தாயாரிடம் கொடுத்தான்.
‘‘குழந்தைகளே! இதை நீங்கள் இருவரும் பாதி பாதியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள் தாய்.
ராஜகுமாரனான தர்மகுப்தன் மறுத்தான். ‘‘அம்மா! என் அண்ணனுக்காக பரமேஸ்வரன் தந்த செல்வம் இது. அண்ணனுக்குத்தான் உரியது. ஸ்வாமி எனக்கும் அருள் புரிவார். நீ கவலைப்படாதே அம்மா!’’ என்றான்.
அவனுடைய பரந்த மனதை பாராட்டிய உமா, ‘‘தெய்வம் உனக்குக் கண்டிப்பாக அருள் புரியும் தர்மகுப்தா!’’ என்றாள்.
பிரதோஷ வழிபாடு முறைப்படி நடந்து வந்தது. ஒரு வருடம் ஆனது. ஒரு நாள் சுசிவிரதனும் தர்மகுப்தனும் ஒரு சோலைக்குள் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரம் தனியாகப் போன தர்மகுப்தன் அங்கு ஓர் அழகியைக் கண்டான். தோழிப் பெண்களுடன் இருந்த அந்தப் பெண்ணும் தர்மகுப்தனைப் பார்த்தாள்.
தர்மகுப்தனைக் கண்டு அவன் அழகில் மயங்கினாள் அந்த அழகி. அவனுடன் ஏதேனும் பேச வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் மேலோங்கியது. தன்னுடன் இருந்த பெண்களைக் கயல்விழியால் ஏறிட்டாள். ‘‘தோழிகளே! நீங்கள் போய் பூக்கள் பறித்து வாருங்கள்!’’ என்று சொல்லி தோழியரை அனுப்பிவிட்டு தர்மகுப்தனிடம் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டாள்.
‘‘பெண்ணே! சத்தியாதனன் என்ற மன்னரின் மகன் நான். என் தந்தை போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப்பட்டார்...’’ என்று தொடங்கி அதுவரை நடந்ததையெல்லாம் விவரித்துவிட்டுத் தற்போது, ‘‘சாண்டில்ய முனிவர் அருளால் அவரிடம் உபதேசம் பெற்று, சிவ பூஜை செய்து வருகிறேன். அதன் பலன்தான், உன்னைப் பார்த்தேன் போலிருக்கிறது!’’ என்று கூறிய தர்மகுப்தன், அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்டான்.
‘‘அரச குமாரரே! உங்கள் உள்ளத்தில் இருப்பது எனக்குத் தெரியும். நான் ஒரு கந்தர்வக் கன்னி. கயிலாயத்தின் தென்பகுதியில் இருக்கும் சேடி என்ற நகரத்தின் அரசரான த்ரிமிஷன் என் தந்தை. என் தாய் தரணி. என் பெயர் அஞ்சுமதி. பூப்பறிப்பதற்காக தோழிகளுடன் வந்த நான் உங்களைக் கண்டு என் உள்ளத்தைப் பறிகொடுத்தேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். அனைவருடைய உள்ளத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி எனக்கு உண்டு. இந்தாருங்கள்!’’ என்று சொல்லி தான் அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றி தர்மகுப்தனின் கழுத்தில் போட்டாள்.
தர்மகுப்தன் மனம் மகிழ்ந்தாலும், ‘‘பெண்ணே! ராஜ்யத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எனக்கு, உன் தந்தையின் அனுமதி இல்லாமல், இப்படி முத்து மாலை போட்டது சரியா?’’ எனக் கேட்டான்.
அஞ்சுமதி சிரித்தாள். ‘‘இளவரசே! இது சரியா, தவறா என்பது நாளை தெரியும். நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். நாளை இங்கு வாருங்கள்!’’ என்ற அஞ்சுமதி, தோழிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
மறுநாள் உமா, சுசிவிரதன், தர்மகுப்தன் மூவரும் கந்தர்வப் பெண் வரச் சொன்ன சோலைக்குப் போனார்கள். அங்கே கந்தர்வப் பெண்ணுடன் அவள் தந்தையும் இருந்தார்.
அவர், மூவரையும் தன் அருகில் உட்காரச் செய்தார். அதன் பிறகு தர்மகுப்தனிடம், ‘‘நேற்று நான் கயிலாய மலைக்குச் சென்று சிவபெருமானை தரிசித்தேன். உன் பக்தியையும் உன் தந்தையின் ராஜ்யம் உனக்குக் கிடைக்கப் போவதைப் பற்றியும் என்னிடம் ஸ்வாமி சொன்னார். உனக்கு உதவும்படி கட்டளையும் இட்டார். தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பியவுடன், என் மகளான இவள் வந்து, நடந்ததை எல்லாம் சொன்னாள். பரமசிவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற உனக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறேன்’’ என்ற கந்தர்வ மன்னர் அப்படியே செய்தார்.
திருமணம் முடிந்ததும் தன் நால் வகைப் படைகளையும் அவர்களுக்கு உதவியாக நிறுத்திவிட்டு, கண்ணுதலோனைக் காணக் கயிலைக்கு விரைந்தார் கந்தர்வ மன்னர்.
தர்மகுப்தன் சிலிர்த்தான். ‘‘தாயே! இனி, பகைவர்களை விட்டு வைக்க மாட்டேன்!’’ என்ற அவன் தாய், அண்ணன், மனைவி ஆகியோருடன் அங்கிருந்து கிளம்பினான். படைகள் பின்தொடர்ந்தன. விதர்ப்ப தேசத்தை அடைந்தார்கள். போர் மூண்டது. கந்தர்வப் படைகளின் முன்னால் பகை அரசர்களின் படைகள் தோற்றுப் போயின. தனக்கு உரிமையான ராஜ்யத்தை அடைந்தான் தர்மகுப்தன்.
அரசனான பின்பும் அரன் பூஜையான பிரதோஷ வழிபாட்டை நிறுத்தவில்லை தர்மகுப்தன். எனவே, தொடர்ந்து அவனுக்கு நன்மைகள் வளர்வதற்குக் கேட்பானேன்!
அபிஷேகப் பொருட்களும் பலன்களும்!
சிவபெருமானை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை அனுபவசாலிகளான நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவை:
வலம்புரிச் சங்கு அபிஷேகம்: தீவினை நீங்கி நல்வினை சேரும். நினைத்தது நடக்கும்.
சொர்ணா(தங்க)பிஷேகம்: வியாபாரம் வளரும்.
பன்னீர் கலந்த சந்தனக் குழம்பு: லட்சுமிதேவியின் கடாட்சம் உண்டாகும்.
விபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.
சந்தனத் தைலம்: சுகத்தைத் தரும்.
திருமஞ்சனப் பொடி: கடன் மற்றும் நோய் தீரும்.
கரும்புச் சாறு: நோய் தீர்க்கும்.
எலுமிச்சம் பழம் (சாறு): பகையை அழிக்கும்.
இளநீர்: இன்பமான வாழ்வு தரும்.
பஞ்சாமிர்தம்: உடல் வலிமையைத் தரும்.
தேன்: குரல் இனிமையைக் கொடுக்கும்.
நெய்: முக்தியைத் தரும்.
தயிர்: நல்ல குழந்தைகள் பெறலாம்.
பால்: நீண்ட ஆயுள் கொடுக்கும்.
அவரவர் விரும்பும் பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். முடியாதபோது நம்மால் எது முடியுமோ, அதை வைத்து அபிஷேகம் செய்யலாம். (கோயிலாக இருந்தால் அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம்.)
தரிசிக்கும் முறை
கோ யிலுக்குள் கொடிமரத்தின் அருகில்தான் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டுமே தவிர, கோயிலுக்குள் வேறு எந்த சந்நிதியிலும் அப்படி நமஸ்காரம் செய்யக் கூடாது.
எந்தச் சந்நிதியில் எப்படி நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள்:
முதலில் விநாயகரை வணங்கி அதன் பிறகு மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், அதாவது தென்திசையில் நின்று வடதிசையை நோக்கி தரிசிக்க வேண்டும்.
மேற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில், தென் திசையில் நின்று வட திசையை நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், மேற்கில் நின்று கிழக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.
வடக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில் இருந்தபடி, மேற்குத் திசையில் நின்று, கிழக்கு நோக்கி தரிசிக்க வேண்டும்.
பிராகாரங்களில் வலம் வரும்போது - கோபுரத்தின் நிழலோ அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால், அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம். ஸ்வாமி உற்சவம் நடக்கும்போது, ஸ்வாமியின் பின்னால் நாம் வரும் காலத்தில் மேலே சொன்ன நிழல்கள் இருந்தாலும் குற்றமில்லை.
எந்தக் கோயில் ஆனாலும் சரி... ஸ்வாமிக்கும் அவருக்கு எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் போகக் கூடாது.
கோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை இடக் கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளலாம்.
வலம் வரும்போது 3, 5, 7, 9 சுற்றுகள் என அவரவர் சௌகரியப்படி வலம் வரலாம். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் வலம் வரக் கூடாது.
ஸ்வாமிக்காகக் கொண்டு போகும் பூக்கள் அல்லது மாலையை, நம் இடுப்புக்குக் கீழே இருக்கும்படி கொண்டு போகக் கூடாது.
ஸ்வாமியை வணங்கும்போது, ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்துக் கும்பிட வேண்டும். தலைக்கு மேல் கைகளை வைத்துக் கும்பிடக் கூடாது. பெண்கள் அங்கப் பிரதட்சிணம் செய்யக் கூடாது.
ஆதிசங்கரர் பெண்ணுக்குக் கல்யாணம்!
பெ ண்ணைப் பெற்றவர்கள் அனைவருக்கும் உண்டான கவலை, ‘நல்ல மாப்பிள்ளையாக வந்து வாய்க்க வேண்டுமே!’ என்பது.
இந்தக் கவலை ஆதிசங்கரருக்கும் வந்தது. உத்தமமான ஒரே ஒரு பெண்ணைப் பெற்ற அவர் நல்ல மாப்பிள்ளையாக, வீட்டோடு இருக்கக் கூடிய மாப்பிள்ளையாகத் தேடி அலைந்தார். ஆனால், அந்த மாப்பிள்ளை ஏற்கெனவே கல்யாணம் ஆனவர். என்ன செய்வது? இருந்தாலும் பரவாயில்லை. இந்த மாப்பிள்ளைக்குத்தான் என் பெண்ணைக் கொடுப்பேன் என்பதில் ஆதிசங்கரர் பிடிவாதமாக இருந்தார். பேசி முடிவு செய்வதற்காக அவரே நேராக மாப்பிள்ளையிடம் போனார்.
ஆதிசங்கரர்: என் பெண்ணை உங்களுக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.
மாப்பிள்ளை: எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிவிட்டதே!
ஆதிசங்கரர்: அதனால் என்ன? பரவாயில்லை. தம்பதி சமேதரான உங்கள் இருவருக்கும் என் பெண் நல்ல விதமாகப் பணிவிடை செய்வாள். நல்ல குணவதி அவள். அவளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
மாப்பிள்ளை: ம்.. அப்புறம்?
ஆதிசங்கரர்: அப்புறமென்ன? கன்னியான என் மகளை ஏற்றுக் கொண்டு எனது வீட்டிலேயே வந்து தங்கி விடுங்கள்.
மாப்பிள்ளை சற்று நிமிர்ந்து ஆதிசங்கரரைப் பார்த்தார். ஆதிசங்கரர் கண்களுடன் தன் கண்களை இணைய விட்டார்.
அவர்கள் கண்கள் இணையட்டும். அதற்குள் நாம் ஆதிசங்கரரின் பெண் யார்? அவர் தேடிய மாப்பிள்ளை யார் என்பதைப் பார்த்து விடலாம்.
உத்தமமான நல்ல குணங்களைக் கொண்ட ஆதிசங்கரரின் புத்தியே அவர் பெண்.
அவர் தேடிப் பிடித்த மாப்பிள்ளை - சிவபெருமான்!
‘‘என் மகளை ஏற்றுக் கொண்டு என் வீட்டிலேயே தங்கி விடு!’’ என்ற ஆதிசங்கரரின் வேண்டுகோளுக்கு, ‘சிவபெருமானே! தாங்களும் பார்வதிதேவியும் தம்பதி சமேதராக என் புத்தியை, உங்கள் பணிவிடைகளில் ஈடுபடுத்திக் கொண்டு என் உள்ளத்திலேயே நிரந்தரமாக எப்போதும் வசித்துக் கொண்டிருங்கள்!’ என்பதே பொருள்.
இந்தக் கருத்தை ஆதிசங்கரரே தன்னுடைய சிவானந்த லஹரியில் 84-வது பாடலில் சொல்லியிருக்கிறார்.
சிவ தவ பரிசர்யா ..... ஸன்னிதானாய கௌர்யா பவ மம குணதுர்யாம் ..... புத்திகன்யாம் ப்ரதாஸ்யே ஸகல புவன பந்தோ ..... ஸச்சிதானந்த ஸிந்தோ ஸதய ஹ்ருதய கேஹே ..... ஸர்வதா ஸம்வஸ த்வம்.
இப்படி ஆதிசங்கரரே தனது சிந்தையைப் பார்வதி-பரமேஸ்வரனிடம் சமர்ப்பித்து, அவர்களைத் தன் உள்ளத்தில் வந்து நிரந்தரமாக வசிக்கும்படி வேண்டி இருக்கிறார் என்றால், நாமும் அப்படிச் செய்ய வேண்டாமா?
காஞ்சி மஹா ஸ்வாமிகள் அருளிய பிரதோஷ தத்துவம்!
பி ரதோஷ காலம் - சூரியாஸ்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதோஷ காலம், பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலம். அதாவது ஈசுவரன், தன் வசப்படுத்திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.
உலகம் ஒடுங்குகிறது; மனசும் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம் - சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.
வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சரிப்பு பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈசுவரன், தான் விட்ட சக்தியை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான்.
பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால், வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.
உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால் இரவு நித்திய பிரளய காலமாகக் கருதப்படுகிறது.
நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பக்ஷிகள், மாடுகள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள்கூட விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர்.
அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகிறது.
அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப் பிசாசுகள்கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தைக் கொடுக்க மாட்டா. அது கண்கட்டு வித்தை போல நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்துவிட்டு, தான் நினைத்ததைச் செய்து விடுகிறான்.
உஷத் காலத்தில் ஹரி ஸ்மரணையும் சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரணையும் உகந்தவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ வேளைதான் முக்கியம்.
இப்படி சிவனை வழிபடுவதற்கும் சிவ பஜனை செய்வதற்கும் எல்லோருக்கும் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகவே பெரும் சிவன் கோயில்களைக் கட்டி னார்கள்.
பிரதோஷ வேளையில் பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்வதால், அந்த வேளையில் நாம் ஈசுவரனை வழிபட வேண்டும்.






 

Comments