சங்கரநாராயணர்

மிழகத்தின் சங்கரன்கோவில் போன்றே கர்நாடக மாநிலத்திலும் ஸ்ரீசங்கரநாராயணர் அருள் புரியும் திருத்தலம் ஒன்று உண்டு. கர்நாடக மாநிலம், தாவன்கரே மாவட்டத்தில், ஹோஸ்பெட் அருகே, துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது ஹரிஹர். பெங்களூருவில் இருந்து சுமார் 275 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராகக் காட்சி தருகிறார். இருபுறமும் பார்வதியும் லட்சுமியும் உள்ளனர்.
13- ஆம் நூற்றாண்டில், ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீஹரிஹரேஸ்வரர் ஆலயம் பிரசித்திப் பெற்றது. முற்காலத்தில் இந்தப் பகுதி, 'கூஹாரண்யம்' எனும் பெயரில் வனமாகத் திகழ்ந்ததாம். இங்கு, கூஹாசுரன் எனும் அரக்கன் வசித்தான். கடும் தவத்தால், எவராலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்ற இந்த அசுரன், அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.
இவனை சம்ஹாரம் செய்ய... விஷ்ணுவுடன் இணைந்த வடிவமாக- ஸ்ரீஹரிஹரனாக தோன்றி, அசுரனை அழித்தார் சிவபெருமான். ஆகவே இந்த ஊர், 'ஹரிஹர்' என்று பெயர் பெற்றது. தட்சிண கயிலாசம் என்று போற்றப்படும் இந்த தலத்தில், தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா எனும் ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் கூடலி. திருமாலின் அம்சமாகக் கருதப்படும் துங்கா நதியும் சிவனாரின் அம்சமாகக் கருதப்படும் பத்ரா நதியும் இங்குதான் ங்கமிக்கின்றன.சங்கரநாராயணரின் திருவடிவை கேசவார்த்த மூர்த்தி, ஹரிஹர மூர்த்தி, அரியார்த்த மூர்த்தி என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த வடிவங்களில், சிவனாரது பாகத்தில் உள்ள முகம் உக்கிரமானதாக (நெற்றிக் கண்ணில் பாதியைக் கொண்டு) திகழும். இட பாகத்தில் உள்ள திருமாலின் திருமுகம் சாந்தமாக திகழும். பின் வலக் கரத்தில்- மழு; இடக் கரத்தில் சங்கு, சக்கரம் அல்லது கதாயுதம்... இவற்றில் ஏதாவது ஒன்று திகழும்! சிவ பாகம் வெண்ணிறமாகவும், திருமால் பாகம் மஞ்சள் பட்டாடை அணிந்தும் இருக்கும். திருவுருவத்தில், தலைக்குப் பின்னே ஒளி வட்டம் அல்லது சிரஸ் சக்கரம் விளங்கும்.
'இந்தத் திருவடிவின் வலப் புறம் நந்தியும், இடப் புறம் கருடனும் இருக்க வேண்டும்' என்று 'விஷ்ணு தர்மோத்தரம்' என்ற நூல் கூறுகிறது.
சிவபெருமானிடம் இருந்து அவரது அருளாகவே வெளிப்பட்ட பராசக்தியின் புருஷாகார வடிவமே திருமால். சைவமும் வைணவமும் சமரசப் போக்கில் தழைக்க எழுந்த... தனிச் சிறப்பு கொண்ட ஸ்ரீசங்கரநாரா யண திருவடிவை, சைவத் திருமுறைகளும் திவ்யப் பிரபந்தமும் போற்றுகின்றன. இந்தக் கோலம் குறித்து, சங்க கால இலக்கியமான அகநானூற்றுப் பாடலிலும் குறிப்புகள் உண்டு.
'பாதியா உடல் கொண்டது மாலையே', 'மாலும் ஓர் பாகம் உடையார்' என்று திருஞானசம்பந்தரும், 'திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்' என்று திருநாவுக்கரசரும் போற்றுகின்றனர்.
'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து,' 'மலை மங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்' என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
பேயாழ்வார், திருவேங்கடம் திருமலையில் விளங்கும் பெருமானைச் சங்கரநாராயணராகவே கண்ட காட்சி இதோ!
'தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து'
மூலப் பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவமும் உள்ளன. இதற்கு, 'அரன்' என்றும் 'நாராயணன்' என்றும் பெயர். இதில் ஓர் உருவத்துக்கு வாகனம்- இடபம்; இருப்பிடம்- மலை; படை (ஆயுதம்)- திரிசூலம்; நிறம்- தீப்பொறி போல் செந்நிறம் என விளங்குகிறது. மற்றொரு உருவத்துக்கு வாகனம்- கருடன்; இருப்பிடம்- பாற்கடல்; படை- சக்கரம்; நிறம்- கரிய திருமேனி என விளங்குகிறது என்பதாக, 'அரன் நாரணன்...' என்று தொடங்கும் பாடலில் பாடுகிறார் பொய்கை ஆழ்வார்.
ஸ்ரீசங்கரநாராயணர் திருக் கோலத்தை, சிவாகமங்கள் தனிச் சிறப்புடன் புகழ்கின்றன. பல்லவ மன்னர்கள் சிவாகமங்களை மிகவும் போற்றியதால், தாங்கள் அமைத்த குடைவரைக் கோயில்கள் பலவற்றிலும்... குறிப்பாக நாமக்கல், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி முதலான தலங்களில் ஸ்ரீசங்கரநாராயணர் வடிவத்தை அமைத்தனர்.
சோழநாட்டில் பல தலங்களில் ஹரிஹரமூர்த்தியின் திருவுருவை மூலவர் கோஷ்டத்தில் காணலாம்.
தஞ்சையில் ஸ்ரீசங்கரநாராயணருக்கு தனிக் கோயில் ஒன்று உண்டு. சரபோஜி மன்னரால் 1805-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில் இது. தஞ்சை பெரியகோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்திலும் அழகிய சங்கர நாராயண மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
முற்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில், சித்திரை மாதம் அதிசயமான திருவிழா ஒன்று நடைபெறுமாம்! பொன்னேரி- ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் சிவ பெருமானும் ஊரின் மறுபுறமான திருஆயர் பாடியில் அருள் புரியும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமா ளும்... பொன்னேரியில் பரத்வாஜர் தவம் இயற்றிய ஆசிரமத்தின் வாயிலில் மாலை மாற்றிக் கொள்வார் களாம். இந்தத் திருவிழா நடைபெறும் வீதி, 'ஹரிஹர வீதி' என்றும் திருவிழா நடைபெறும் நன்னாளை 'ஹரிஹர சந்திப்பு' என்றும் கொண்டாடினராம்!

Comments