லட்சுமிதேவி அவதரித்த இடம்.


நற்கொடிமேல் விடைஉயர்த்த நம்பன் செம்பங் குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான்குடிகற்குடிதென் களக்குடிசெங் காட்டங்குடிகருந்திட்டைக் குடிகடையக் குடிகாணுங்கால்விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக்குடிவேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடிபுற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடிபுதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே
திருநாவுக்கரசரது (அடைவுத் திருத்தாண்டகம்) இந்தப் பாடலில், 'மாகுடி' என்று குறிப்பிடப்படும் தலமே, இடர்களைக் களையும் திருத்தலங்கள் வரிசையில், மாகுடியையும் குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர் பெருமான்! இது, தேவார வைப்புத் தலம்.
பெருமைப்படும் அளவுக்கு சைவம் இன்று தழைத்தோங்கி நிற்கிறதென்றால் அதற்குக் காரணம், இந்த சமயத்தை அரும்பாடுபட்டு வளர்த்த சான்றோர்களே. அவர்களை அனுதினமும் நினைத்துப் பார்க்க வேண்டும்; இறை அருள் ஒன்றையே இனிய வரமாகப் பெற்று இன்முகத் துடன் வாழ்ந்த அவர்களது காலத்தைப் போற்ற வேண்டும். கைகூப்பித் தொழுது, அவர்களது புகழ் பாட வேண்டும்.
தகவல் தொடர்புச் சாதனங்கள் எதுவுமே இல்லாத காலத்தில், ஊர் ஊராக நடந்தே சென்று இறைவனின் புகழ் பாடி, அவனது பெருமைகளை அன்பர்களுக்குக் கதையுடன் சொல்லி, இறை இன்பத்தில் அவர்களைத் திளைக்க வைத்தவர்கள் இந்த அடியார்கள்.
அடியார்களது இந்த அருந்தவ தொண்டைப் போற்றும் விதமாக சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய சைவ நால்வரின் தனிச் சந்நிதியும், சைவம் சிறப்பிக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுரு வங்களும் சிவாலயங்களில் அமையப் பெற்றிருப்பதை இன்றும் காணலாம்.
பழைமையான ஆலயங்களின் சிறப்புகளை அன்றைக்கு அவர்கள் குறித்து வைத்து பாடி இருக்காவிட்டால், அதன் பெருமைகள் என்றைக்கோ மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும். சர்க்கரை இல்லாமல் இனிப்புப் பண்டம் தயாரிக்க முடியுமா? அதுபோல் அடியார்களது ஒத்துழைப்பும் ஈடுபாடும் இல்லாமல், பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள் பலவற்றின் மகிமை களை அனைவரும் அறிந்திருக்க முடியாது.
ஆண்டவனுக்கு இணையாக அடியார்களது விழாக் களும் இன்றைக்கு ஆலயங்களில் அமர்க்களமாக நடத்தப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில் பெருமளவு போற்றப்பட்ட அந்த அடியார்கள், மக்கள் மனங்களிலும் நிறைந்தார்கள். இந்த மண்ணில் உதித்த அந்த மகான்களை வணங்கி, ஆசி பெறுவோம்.
திருநாவுக்கரசர் பெருமானால் பாடிச் சிறப்பிக்கப்பட்ட மாமாகுடி திருத்தலத்தின் பெருமைகளைப் பார்ப்போமா?
- தேவார வைப்புத் தலம்.
- மேலப்பெரும்பள்ளம் 'வலம்புரநாதர் வலம்புர மாலை'யில் இந்தத் தலம் பற்றி பாடப்பட்டுள்ளது.
- இந்திரனால் பூஜிக்கப்பட்டது.
- சோழர்களால் கட்டப்பட்ட பெருமைக்கு உரியது.
- திருமால்மாகுடி, மாகுடி, லட்சுமிபுரம் என்றெல்லாம் ஆதி காலத்தில் இந்தத் தலம் அழைக்கப்பட்டுள்ளது.
மாமாகுடி எங்கே இருக்கிறது?
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்கு வடக்கிலும், காவிரிக்கும் திருவலம்புரத்துக்கு (மேலப்பெரும்பள்ளம்) தெற்கிலும், ஆக்கூருக்கு கிழக்கிலும், பூம்புகாருக்கு மேற்கிலும் அமைந்துள்ள திருத்தலம் மாமாகுடி.
சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில், ஆக்கூர் முக்கூட்டு ரோட்டின் அருகே வரும் சிறு கிராமம் பூந்தாழை. இங்கிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு. மயிலாடுதுறை- பொறையார்/தரங்கம்பாடி சாலையில் பயணித்தால், ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இறங்கி மாமாகுடி செல்ல லாம். ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. திருக்கடையூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு. பூம்புகாரில் இருந்து 8 கி.மீ. தொலைவு. எங்கிருந்து புறப்பட்டாலும் ஆக்கூர் முக்கூட்டு ரோட்டுக்கு வந்து விடுவது நல்லது. அங்கிருந்து ஆட்டோ மூலம் ஆலயத்தைச் சென்றடையலாம்.
தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த நிகழ்வு, திருக்கடையூரில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, புனிதத்துவம் நிறைந்த பொருட்கள் பல தோன்றின என்கிறது புராணம். காமதேனு, தன்வந்திரி பகவான், லட்சுமிதேவி போன்றோரும் பாற்கடலில் இருந்து தோன்றினார்கள்.
பாற்கடலைக் கடையும்போது, முதன் முதலாக சங்கு தோன்றிய இடம், 'தலைச்சங்காடு' எனப்பட்டது. அடுத்தடுத்து, சங்குகள் தோன்றிய இடம், 'சங்கேந்தி' ஆனது. பாற்கடலைத் தொடர்ந்து கடைந்ததன் விளைவாக குறிப்பிட்ட ஓர் இடம் மட்டும் பள்ளமாகிப் போனது. அங்கே நீர் நிரம்பியது. இந்த இடம் 'கிடங்கல்' எனப்பட்டது. திருமகளாகிய லட்சுமி தேவி தோன்றிய இடம் 'மாகுடி' என வழங்கப்பட்டது. இங்கே சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் திருக்கடையூரைச் சுற்றி இன்றும் காணப்படுகின்றன.
லட்சுமிதேவி அவதரித்த இந்தத் தலத்தை ஆதி காலத்தில் 'திருமால்மாகுடி' என்றும் 'லட்சுமிபுரம்' என்றும் அழைத்து வந்தார்கள். 'மா' என்றால் லட்சுமி. 'குடி' என்றால் பிறந்த ஊர். செல்வ வளத்துக்கு அதிபதியான லட்சுமிதேவி அவதரித்த தலம் இது என்பதால், மாகுடி என வழங்கப்பட்டு, இப்போது மாமா குடி ஆயிற்றாம்.
''புராதனமான ஆலயம். புண்ணியம் நல்கும் திருத்தலம். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி அவதரித்த தலம் என்பதால், இங்குள்ள ஆலயத்துக்கு பொருளுதவி செய்தால், அந்த மகாலட்சுமியையே போற்றி வணங்குவதற்குச் சமம். உலகையே செழிக்க வைக்கும் மகாலட்சுமிதேவி, இந்தத் திருத்தலத்துக்கு வந்தோரையும் கொழிக்க வைப்பாள்!'' என்கிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.
ஆனால், ஆலயத்தின் இன்றைய நிலைமை..? மழைக் குக் கூட இந்த ஆலயத்தின் பக்கம் எவரும் ஒதுங்க மாட்டார்கள் போலிருக்கிறது. காரணம்- உள்ளே ஒதுங்கினால் முழுக்க முழுக்க நனைந்து விடுவார்கள். தவிர, ஆலயமும் ரொம்ப பழைமையானது.
உள்ளூர் அன்பரான சுரேஷ், ''ஆலயம் பெருமளவு சிதிலமடைந்து காணப்படுகிறது. கருவறை விமானத் தில் வளர்ந்துள்ள மரம் மற்றும் செடி- கொடிகளின் வேர், மெள்ள கீழே ஊடுருவிப் போய் கருவறைப் பிரதேசத்துக்குள்ளும் தனது ஆக்கிரமிப்பை நீட்டித் துள்ளது. கருவறை மற்றும் அர்த்த மண்டப பகுதி களில் வேர்களும் கிளைகளும் அடர்த்தியாகக் காணப்படுகின்றன.
கிராமத்தின் ஒரு மூலையில் இருக்கிற ஆலயம் என்பதால் வெளியூர்வாசிகள் எவருக்கும் இதைப் பற்றித் தெரியவில்லை. இதன் அருமை பெருமைகள் புரியவில்லை. பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட விசேஷ நாட்களில் கணிசமான அளவுக்கு பக்தர்கள் வருகிறார்கள். தற்போது தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. பழம் பெருமை வாய்ந்த இதன் சாந்நித்தியம் பற்றி எவருக்கும் தெரியவில்லை'' என்கிறார் நம்மிடம்.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஆலயப் பகுதி அமைந்துள்ளது. நடுவே, சிம்பிளாக காணப் படுகிறது ஆலயம். சுற்றிலும் காடு போல் மண்டிக் கிடந்த செடி- கொடிகள், முட்புதர்கள் போன்றவற்றை சமீபத்தில்தான் 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு சுமார் 13 மணி நேரம் போராடி அகற்றி இருக்கிறார்கள்.
தற்போது, சுமார் 25 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் ஆலயத் திருப்பணி வேலைகளைத் துவக்க உள்ளார்கள். ஊர்க்காரர்களின் முழு ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் இந்த ஆலயம் மீண்டும் பொலிவு பெற உள்ளது. வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 3:30 மணிக்கு பாலாலயப் பணிகள் முறை யாகத் துவங்குகின்றன. மறுநாள் காலை 9 மணிக்கு மேல் 10:30-க்குள் சிறப்பு வழிபாட்டுடன் பாலாலயம் அமைக்க இருக்கிறார்கள்.
ஆலயப் பணிகளில் மும்முரமாக இருக்கும் உள்ளூர்க்காரரும், 'சிவகாமசுந்தரி சமேத சிவலோக நாத ஸ்வாமி கைங்கர்ய சபா'வைச் சேர்ந்தவருமான ராஜாமணி (வயது 75) நம்மிடம் பேசினார்:
''தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடந்த கோயில் இது. பிரமாண்டமான இந்த ஆலயப் பகுதிக்கு ஒரு காலத்தில் சுற்றுச்சுவர் இருந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்தப் பிரதேசத்தில் பனை மரங்களும், இலுப்ப மரங்களும் அடர்ந்து காணப்பட்டன. சுற்றி உள்ள ஆலயங்களில் கார்த்திகை மாத சொக்கப்பனை வைபவத்துக்கு இங்கே வந்துதான் பனை மட்டைகளை எடுத்துச் செல்வார்கள். இலுப்பைத் தோப்பை ஒருவருக்கு ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து ஒரு முறை ஆலயத்தைச் சிறிய அளவில் மராமத்து செய்தோம். பெரிய அளவில் ஆலயத்துக்கென்று வருமானம் எதுவும் இல்லை.
கும்பாபிஷேகம் நடந்து ஆண்டுகள் பல ஆகின்றன. சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற வைபவங்கள் நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்பு வரை விமரிசையாக நடைபெற்றன. கடல் சார்ந்த பகுதி என்பதால், இரண்டு மூன்று முறை வீசிய கடும் புயலால் ஆலயத்தின் கலசங்கள் பெயர்ந்து விழுந்து விட்டன. அதன் பின் அதைச் சரி செய்ய முடியவில்லை. தவிர, 1975-க்குப் பின் விவசாயமும் பெருமளவில் எங்களுக்குக் கை கொடுக்காததால் ஆலயத்தின் பக்கம் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
இப்போதுதான் சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் திருப்பணி வேலைகளைத் தொடங்க இருக்கிறோம். ஆலயத்தில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதற்காக சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இங்கே ஒரு ஹோமத்தை நடத்தினோம். அதன் நற்பலனோ, என்னவோ... பாலாலயத்துக்கு நாள் குறித் தாயிற்று. சிவலோகநாதரின் அருளால் விரைவில் மற்ற பணிகள் விறுவிறுப்படையும் என்று ஊர்க்காரர்களாகிய நாங்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி என்கிற அம்மாள், இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்து, திருப்பணி வேலை களுக்கு ஒத்துழைப்பதாகச் சொல்லி இருப்பது எங்களுக்கெல்லாம் பெரிய தெம்பாக இருக்கிறது'' என்றார் ராஜாமணி.
ஆலயத்தை தரிசனம் செய்வோமா?
கிழக்கு நோக்கிய சிவாலயம். தெற்குப் பக்கமும் ஒரு வாசல் முன்பு இருந்துள்ளது. ஆக்கிரமிப் பின் காரணமாக அந்த வாசல் தற்போது அடை பட்டுள்ளது. ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. பிரதோஷ நந்திதேவர், தனி மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.
உள்ளே நுழைகிறோம். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, பிராகாரம் என்று தற்போது காட்சி தருகிறது ஆலயம். ஒரு காலத்தில் ஆலயத்தின் வெளியே சுற்றுச்சுவர் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. ஆனால், தற்போது சுற்றுச்சுவர் எதுவும் இல்லை. திருப்பணி வேலைகளின்போது அவை கட்டப்படுமாம்.
மகா மண்டபத்தின் தரையில் ஏராளமான விரிசல். அப்பன் சிவலோகநாதருக்கும், அம்மை சிவகாம சுந்தரிக்கும் பொதுவான மகா மண்டபம் இது. இங்கே தெற்குப் பார்த்த நிலையில் அம்மை வீற்றிருக்கிறாள். அட்சர மாலை, தாமரை மலர் ஏந்தி அபயம்- வரதம் அருளும் நான்கு திருக்கரங்கள். அம்பாளுக்கு எதிரே தான் தெற்கு வாயில். இதன் வழியே சென்றால் அக்ரஹாரத்தை அடைந்து விடலாம். இந்த வாயில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்று ஏற்கெனவே சொல்லி இருந்தோம்.
மகா மண்டபத்திலேயே நடராஜர் மண்டபம். பாதுகாப்பு கருதி பிரமாண்டமான உற்சவர் நட ராஜர் விக்கிரகத்தை, இதே ஊரில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். அன்னை சிவகாமியுடன் காட்சி தருகிறார் நடராஜர். தவிர, சண்டிகேஸ்வரர் பஞ்சலோக விக்கிரகத்தின் தரிசனமும் இங்கே கிடைக்கிறது. ஆலயத்துக்கென்று இந்த மூன்று உற்சவர் விக்கிரகங்கள்தான் இருக்கின்றன. இவை மூன்றும் ஆலய திருக்குளத்தில் இருந்து சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் கிடைத்ததாம்.
அந்த சம்பவம் சுவாரஸ்யமான ஒன்று:
ஆலயத்துக்குச் சொந்தமான திருக்குளம், பின்பக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊருக்கே தண்ணீர் தந்த திருக்குள மாம் இது. பளிங்கு மாதிரி சுத்தமாக இருக்கும் இந்தத் தண்ணீரில் இறங்கி, குளித்து விட்டுத்தான் சிவலோகநாதரை தரிசிக்கச் செல்வார்களாம். இது பழைய கதை. தற்போது குளத்தின் நிலைமையைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது.
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன், குறவர் இனத்தைச் சேர்ந்த ஓர் ஆசாமி, குளத்தில் இருந்த ஆமையைப் பிடிப்பதற் காக ஈட்டி போன்ற ஓர் ஆயுதத்தை தண்ணீருக்குள் விட்டு குத்தி இருக்கிறார். ஆனால், அந்த ஆயுதம் நழுவி, வேறெங்கோ பாய்ந்திருக்கிறது. ஆமை அகப்படவில்லை. ஆனால், ஈட்டி பட்ட இடத்தில் இருந்து, 'ணங் ணங்' என்று உலோக சத்தம் வந்திருக்கிறது. தகவல் கேள்விப்பட்டு ஊர்க்காரர்களும் ஒன்று கூட... சிலர் குளத்துக்குள் மூழ்கி, சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்திருக்கிறார்கள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. குளத்தின் அடியில் இருந்து இந்த நடராஜர், சிவகாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சலோக விக்கிரகங்களை ஊர்க்காரர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள்.
அந்நியர்களின் படையெடுப்புக்கு பயந்து... முன்னோர்கள், இந்த விக்கிரகங்களைக் குளத்துக்குள் போட்டு மறைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இது போன்ற வேறு சில விக்கிரகங்களும் இந்தக் குளத்துக்குள் மறைந்திருக்கலாம் என்கிற பேச்சும் தற்போது உண்டு. இந்த நடராஜர்- சிவகாமி விக்கிரகங்களை வைத்து, ஒவ்வொரு வருடமும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்று வந்ததாம். தற்போதும் ஆருத்ரா நாளன்று, விக்கிரகங்களை சிவலோகநாதர் ஆலயத்துக்கு எடுத்து வந்து, நடராஜர் மண்டபத்தில் வைத்து அபிஷேக- ஆராதனை நடத்துகிறார்கள்.
ஆலயத்தின் மகா மண்டபத்தில் இருக்கிறோம். விநாயகப் பெருமான், மகாலிங்கம் (திருவிடைமருதூரை ஒட்டிய பகுதி என்பதால் இங்குள்ள சில சிவாலயங்களில் மகாலிங்கரின் லிங்கத் திருமேனியை தரிசனம் செய்யலாம்), பாலசுப்ரமண்யர், பைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர் ஆகிய திருமேனிகளை தரிசிக்கலாம்.
அடுத்து, மூலவர் சிவலோக நாதரின் தரிசனம். திருநாவுக்கரசர் பாடி பரவசப்பட்ட லிங்கத் திருமேனி. சற்றே சிறிய லிங்கம். உயரமான பாணம். அகிலத்துக்கே அதிபதியான அந்த சிவலோகநாதர், தன்னை வளப்படுத்திக் கொள்ளும் காலத்தை இப்போதுதான் நிர்ணயித்திருக்கிறார் போலும். 'நமசிவாய' நாமம் துதித்து, நெக்குருக அப்பனை வழிபட்டு, வெளியே வந்து பிராகார வலம் துவங்குகிறோம்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டுமே காணப்படுகிறார். மற்ற கோஷ்ட தெய்வங்கள் இல்லை. தனிச் சந்நிதிகளில் விநாயகர் (இவருடைய வாகனமான மூஞ்சுறு இருந்ததாம். யாரோ விஷமிகள் தூக்கிச் சென்று விட்டார் களாம்), கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். திருப்பணி வேலைகளில் புதிய கோஷ்ட தெய்வங்களையும், பிற சந்நிதிகளையும் நிர்மாணிக்க இருக்கிறார்கள். பிராகார வலத்தின்போது சிவலோகநாதர், சிவகாமசுந்தரி, நடராஜர் ஆகியோரின் விமானங்களை தரிசிக்க முடிகிறது.
'ஊர் சிறப்பாக விளங்க வேண்டும்; மக்கள் நன்றாக இருக்க வேண்டும்; வளங்கள் பெருக வேண்டும்' என்கிற நல்லெண்ணத்துடன் சோழ மன்னர்கள் கட்டிய சிவலோகநாதர் ஆலயம் இன்று சோபை இழந்து காணப்படுகிறது. மக்களே இன்று ஒன்று கூடி, புனரமைப்பு வேலைகளைத் துவக்கி இருக்கிறார்கள். லோகத்தைக் காக்கும் அந்த நாயகனின் ஆலயம், புதுப் பொலிவும் மெருகும் பெற புண்ணிய ஆத்மாக்கள் உதவட்டும்! புனிதம் எங்கும் பெருகட்டும்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : மாகுடி என்கிற மாமாகுடி
மூலவர் பெயர் : அருள்மிகு சிவலோகநாதர் மற்றும் அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள்.
தலச் சிறப்பு : திருப்பாற்கடல் கடையப்படும்போது லட்சுமிதேவி அவதரித்த இடம்.
அமைந்துள்ள இடம் : சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் ஆக்கூர் முக்கூட்டு ரோட்டின் அருகே வரும் சிறு கிராமம் பூந்தாழை. இங்கிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு. மயிலாடுதுறை - பொறையார்/தரங்கம்பாடி சாலையில் பயணித்தால் ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இறங்கி மாமாகுடி செல்லலாம். ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. திருக்கடையூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு. பூம்புகாரில் இருந்து 8 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது : மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி, காரைக்கால் என எங்கிருந்து புறப்பட்டாலும் மேலே சொன்ன மார்க்கத்தில் பயணித்து ஆக்கூர் முக்கூட்டு ரோட்டுக்கு வந்து விடுவது நல்லது. அங்கிருந்து ஆட்டோ மூலம் ஆலயத்தைச் சென்றடையலாம்.
ஆலயத் தொடர்புக்கு :
ராஜாமணி, அக்ரஹாரம், மாமாகுடி போஸ்ட்,
ஆக்கூர் (வழி), தரங்கம்பாடி தாலுகா, மயிலாடுதுறை ஆர்.எம்.எஸ்.
பின்கோடு: 609 301.
போன்: 04364 280009
மகாலட்சுமி, துளசி அபார்ட்மெண்ட்ஸ்
3, கீத கோவிந்தம், 11, குப்புசாமி தெரு
தி. நகர், சென்னை- 600 017.
போன்: (044) 2815 2533
மொபைல்: 98400 53289

Comments