ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்

திருமணத்தன்று மணமேடையை விட்டு ஒரே ஓட்ட மாக ஓடி, பின்னர் மாபெரும் ராமபக்தராக மாறி,வாழ்க்கையை ராமனுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த மகான், மராட்டிய மாமன்னன் சிவாஜியின் குருவாக அமைந்த ஸ்ரீ ராமதாசர்தான்.
நாராயணன் ராமதாசராக மாறிய பரிணாம வளர்ச்சியில் இந்துமதம் தழைத்தது. அவரது சீடன் மாபெரும் அரசனாக இருந்தும் குருபக்திக்கு இலக்கணமாகத்  திகழ்ந்ததால் தேசத்திற்கு நன்மை விளைந்தது.

ஒருமுறை சென்னை வந்த சக்தி உபாசகனான மன்னன் சிவாஜி, காளிகாம்பாள் கோயிலுக்கும் வந்திருக்கிறான். மகாகவி பாரதி பின்னர் வழிபட்ட அன்னை  காளியைத் தானும் வழிபட்டு அருள்பெற்றிருக்கிறான். இந்தத் தகவலைச் சொல்கிறது சென்னை காளிகாம்பாள் ஆலயக் கல்வெட்டு.

மராட்டியத் திலகம் வேடமேற்றுத் தன் நடிப்புலக வாழ்க்கைக்குத் தொடக்க காலத்தில் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட `சிவாஜி` கணேசன், நடிகர்  திலகமாகப் புகழ்பெற்றது கடந்த காலச் சுவடைத் தாங்கிய அண்மைக்கால வரலாறு.

திருமணத்தன்று திருமணம் நிகழும் முன் ஓடிய மாப்பிள்ளை ராமதாசர் என்றால், திருமணம் நிகழ்ந்த பின் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் ஓடிப் போய்த் து றவியான மாப்பிள்ளையும் ஆன்மிக வரலாற்றில் உண்டு. சிவராம கிருஷ்ணன் அப்படித் துறவியானவர் தான். 

மோட்ச சோமசுந்தர அவதானி என்ற மாபெரும் கல்வியாளருக்கும் அவரது மனைவி பார்வதிக்கும் மகனாகப் பிறந்தான் சிவராமகிருஷ்ணன். குழந்தைப் பரு வத்திலேயே ஆன்மிக நாட்டம் மிகப்பெரும் அளவு அவனிடம் குடிகொண்டிருந்தது.அவனது இயல்பே ஆன்மிகமாக இருந்தது. எப்போதும் தெய்வ சிந் தனைதான். தியானம் தான். இசையிலும் அவனுக்குத் தீவிர நாட்டம்.

நெடுநேரம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அவனைப் பார்த்து எல்லோருக்கும் வந்த சந்தேகம் அவனது பெற்றோருக்கும் வந்தது. ஒருவேளை பைத்தியமோ?  அதன் தொடக்க நிலை தானோ இது?

உறவினர்களும் நண்பர்களும் அறிவுறுத்தியதன் பேரில் பெற்றோர் ஒரு முடிவெடுத்தார்கள். பைத்தியமா இல்லையா என்று தெரியவில்லை. சாதாரணமாகத்தான்  இருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் மற்றவர்களை விட புத்திசாலித்தனமாகப் பேசுகிறான். உள்ளம் உருகப் பாடுகிறான். எல்லாம் சரி. ஆனால்  ஆலயங்களிலும் ஆற்றங்கரைகளிலும் தன்னுணர்வற்றுப் பல மணிநேரம் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறானே? அவனை மாற்றுவது எப்படி?

பைத்தியம் பிடிப்பதற்கான அறிகுறியாக இருந்ததனால் திருமணம் செய்துவைத்து விட்டால் சரியாகிவிடும் என்று எல்லோரும் சொல்கிறார்களே? எப்படியும்  பதினேழு வயதாகிவிட்டது. திருமணம் செய்துவைத்து விடுவோம். இனியும் தாமதிப்பது சரியில்லை.

திருமண ஏற்பாடுகள் கிடுகிடுவென நடைபெறத் தொடங்கின. சிவராமகிருஷ்ணன் திகைப்படைந்தான். அவனுக்கு மணவாழ்வில் சிறிதும் நாட்டமில்லை. இறையருள் அவனிடம் பூரணமாகத் துலங்கத் தொடங்கிய காலம் அது.திருமணமே வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தான். ஆனால் அதைக்  கேட்பவர் யார்?

அப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே பெண்ணுக்குத் திருமணம் நடப்பது வழக்கமல்லவா?வயதுக்கு வராத ஒரு சிறுமியே சிவராம-கிருஷ்ணன் என்ற பதினேழு வயதுப் பையனின் மனைவியானாள். சிறிதுகாலம் சென்றபின் முறைப்படி மணவாழ்வை அவர்கள் தொடங்க வேண்டும்.

ஒருநாள்...எங்கோ ஆற்றங் கரையில் நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்த சிவராமகிருஷ்ணன் வீடுதேடி வந்தான். பசியை மறந்து பலமணி நேரம் தியான த்தில் ஆழ்ந்திருந்ததால் அவனுக்குச் சரியான பசி அப்போது.வீட்டில் ஏதாவது உணவு கிடைக்கும் என்பதுதான் அவன் வீடுவரக் காரணம்.

வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.வாசலில் மாவிலைத் தோரணங்கள்.வீட்டின் தரையெல்லாம் வண்ண வண்ணக் கோலங்கள். என்ன விசேஷம் இ ன்றைக்கு என்று விசாரித்தான்.அவன் மனைவி புஷ்பவதியானதைக் கொண்டாடும் சடங்கு நடந்துகொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார்கள்.

சடங்கு எப்போது முடியும்? பசி வயிற்றைக் கிள்ளுகிறதே? அவன் சமையலறை நோக்கிப் போனான்.அவன் தாயார் அங்கே உணவு தயாரிப்பதில் பரபரப்பாக  ஈடுபட்டிருந்தார்.

சமையலறை வாயிலில் நின்றவாறே,`பசி வயிற்றைக் கிள்ளுகிறது, கொஞ்சம் உணவு கொடு!` என்று கேட்டான். `பெரிய விருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறது. சற்றுநேரம் பொறுமையாகக் காத்திரு!` என்று அதட்டினார் தாயார்.

காத்திருப்பதா? பசி உயிர்போகும்போல் இருக்கிறது. உணவுக்காகச் சொந்த வீட்டில் ஏன் காத்திருக்க வேண்டும்?

‘எனக்கு விருந்துப சாரமெல்லாம் தேவையில்லை. ஏதோ இருக்கும் கொஞ்ச உணவை இப்போதே போட் டால் அதுபோதும். பசி பிராணன் போகிறது!`

சமையலறைக்குள் நுழைய முற்பட்டான்.

‘உள்ளே வராதே. அங்கேயே நில்!` உத்தரவிட்டார் தாயார்.

பெண்கள் கூடிச் சடங்குகள் செய்துகொண்டிருக்கும் வீட்டில் ஒரு வாலிபனுக்கு என்ன வேலை? சாப்பாடு தயாரானபின் தானே பரிமாற முடியும்? அதற்குள்  இவன் இப்படி அவசரப்படுகிறானே? தாயார் குரலில் கண்டிப்பும் சலிப்பும்.

சிவராமகிருஷ்ணன் திகைப்படைந்தான். `உள்ளே வராதே! அங்கேயே நில்!` என்ற வார்த்தைகள் ஏதோ மந்திரச் சொற்கள் போல் அவன் செவிகளில் ரீங்கரித் தன.வெளி முற்றத்துத் திண்ணையில் வந்து உட்கார்ந்து சிந்திக்கலானான்.

‘கிரகஸ்தாசிரமத்தின் உள்ளே வராதே! பிரம்மச்சரிய ஆசிரமத்திலேயே நில்!`என்று அம்பிகை தான் அம்மாவின் நாவில் புகுந்து கட்டளையிடுகிறாளோ? மனைவி புஷ்பவதியானதற்கான சடங்கு நடைபெறும் நாளிலேயே சோற்றுக்கு இத்தனை தாமதம் ஆகிறதே? சம்சார பந்தத்தில் சிக்கினால் இன்னும் என்னெ ன்ன சங்கடமெல்லாம் நேருமோ? நான் இப்போது என்ன செய்யவேண்டும் தெய்வமே?

இவர்கள் என் ஆன்மிக நாட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எனக்கு மணம் செய்து வைத்துவிட்டார்கள்.எவ்வளவு மறுத்தும் என் திருமணத்தை என்னால் தடுக்க இயலவில்லை.நான் மணவாழ்வு நடத்தும் சராசரி மனிதனல்ல.சிவம் என்னும் அந்தப் பிரும்மத்தைப் பற்றிச் சதா சிந்தித்து முக்தியடையப்  பிறந்தவன். இப்போதே விழித்துக் கொண்டு ஒரு முடிவெடுத்தால்தான் நல்லது.இல்லாவிட்டால் காலம் கடந்துவிடும். சம்சார சாகரம் நம்மை மூழ்கடித்துவிடும்.

சிவராம கிருஷ்ணன் சடாரென ஒரு முடிவெடுத்தான்.முக்தி என்னும் வீடு அடையும் முயற்சியில் முற்றிலுமாக ஈடுபடத் தீர்மானம் செய்து, தான் வசித்த வீட்டைத் துறந்தான்.மணமானாலும் இல்லறத்தைத் தொடங்காமலே துறவியானான்.

வீட்டை விட்டு வெளியே சென்றவனுக்கு உலகமே வீடாயிற்று. தியானத்தில் நெடுநேரம் தோய்ந்து எப்போதும் பிரம்மத்தைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி,  சிவராமகிருஷ்ணன் சிறிது காலத்தில் சதாசிவப் பிரம்மேந்திரராக மலர்ந்தபோது உலகம் அவரை இருகை கூப்பித் தொழுதது.

ஆடையைப் பற்றிக் கூட அக்கறையற்றவராய் இறைச் சிந்தனையில் மனம்தோய்ந்து ஒரு முஸ்லீம் மன்னனின் அந்தப்புரத்தில் அவர் தன்னுணர்வற்றுச் சென் றதுண்டு. அப்போது, அவரைப் பற்றி அறியாத அந்த மன்னன் அவரது கையை வெட்டியதும் உண்டு!

அதை உணராது இறைச்சிந்தனையிலேயே தோய்ந்து உணர்வற்று அவர் மேலும் நடந்தார்! முஸ்லீம் மன்னன் பதறிப்போய் அவரை உலுக்கி நினைவுக்குக்  கொண்டுவந்து அவரது கையை அவரிடமே கொடுத்துத் தன் பிழை பொறுக்கவேண்டி அழுதான். வெட்டிய கையை மீண்டும் ஒட்டவைத்துச் சரிசெய்து கொண்டு பழையபடி இறைச்சிந்தனையில் தோய்ந்து அவர் மேலும் நடந்ததெல்லாம் வரலாறு.
அவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரில் அமராவதி நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது.இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார் `சர்வம் பிரம்ம மயம், பிபரே ராமரசம், ப்ரூஹி முகுந்தேதி, மானச சஞ்சரரே, காயதி வனமாலி, பஜரே யதுநாதம்` போன்ற கீர்த்தி  மிகுந்த கீர்த்தனைகளை அருளி இலக்கிய உலகிலும் இசையுலகிலும் ஆன்மிக உலகிலும் ஒருசேரப் புகழ்பெற்ற மகான் ஸ்ரீசதாசிவப் பிரம்மேந்திரர்.

சதாசிவப் பிரம்மேந்திரர் சமஸ்க்ருதத்தில் கவிதை எழுதிய துறவி என்றால், தமிழில் கவிதை எழுதித் தமிழ் இலக்கிய உலகில் பெரும்புகழ் பெற்றார் மற்றொரு  துறவி. அவரது சொக்கவைக்கும் சுந்தரத் தமிழ்க் கவிதைகளைச் சொல்லச் சொல்ல நா இனிக்கும்.மனம் பரவசம் கொள்ளும். அற்புதத் தமிழ்க் கவிஞரான  அந்தத் துறவி ஏழைகளின் வயிற்றுப் பசியைக் கண்டு உள்ளம் பதறிய உத்தமர். புலால் உணவைத் தீவிரமாய்க் கண்டித்தவர்.

அவரும் திருமணமான பின் தான் துறவு பூண்டார்.முதலில் திருமணத்திற்கு அவர் மறுத்தாலும் உறவினர் வற்புறுத்தலின் பேரில் அவரது திருமணம் நிகழ்ந்தது.ஆனால் மிக விரைவிலேயே திருமண பந்தத்தை உதறிவிட்டு,அவர் துறவு பூண்ட விதத்தில் ஓர் ஆச்சரியகரமான சம்பவம் உண்டு.

 திருமணமானபின் துறவு பூண்டோர் எல்லாம் அந்தத் துறவு நிலைக்கு மனைவியின் அனுமதியைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது. மனைவியை  மனங்கலங்க வைத்துப் பிரிந்து சென்றவர்களே பலர்.

ஆனால் இவரின் மனைவி, இவரை அடிபணிந்து தொழுதாள். அவள் இவரின் உறவுக்காரப் பெண்ணும் கூட. `துறவே தங்களுக்கு உரியது. நான் பந்தத்தால் உங்கள் மனைவியானாலும் உங்கள் அடியவர்களில் ஒருத்தியும் கூட!` என்று மிகுந்த மனமுதிர்ச்சியோடு தெரிவித்தாள்.

உறவினர்களெல்லாம் கணவரது துறவு நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது, அவரது மனைவி, துறவே தன் கணவரின் இயல்பு நிலை என்று அவர் சார்பில் வாதாடினாள். அவரைத் துறவியாக்கி நமஸ்கரித்து வாழ்த்தி வழியனுப்பினாள்.ஆன்மிகத் துறவு வர லாற்றில் அவள் ஒரு புரட்சிப்பெண்.

Comments